காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாஜக போராட்டம்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
சென்னை,
கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. இந்த நிலையில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இறுதியாக காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் காவிரி மேலாண்மை ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீரும் படிப்படியாக திறந்து விடப்பட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கூறியது. அதாவது ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை-34, ஆகஸ்டு-50, செப்டம்பர்-40, அக்டோபர்-22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3 என ஒவ்வொரு மாதத்திற்கும் கணக்கிட்டு மொத்தம் 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இதுபோல் கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் (ஜூலை) நன்றாக பெய்தது.
அதே நேரத்தில் கடந்த ஜூன் மற்றும் நடப்பு மாதத்தில்(ஆகஸ்டு) போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் இடர்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் திறக்கும்படி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் கர்நாடக அரசு தங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கூறியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதில் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளது. அந்த மனு இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தனது நிலைப்பாடு குறித்து இன்று பதில் மனு தாக்கல் செய்ய இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ததை அடுத்து காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
வினாடிக்கு சுமார் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நேற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 717 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளன. யாரை கேட்டு தண்ணீர் திறந்தீர்கள் என்றும், காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்றும் அக்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 23-ந் தேதி(நாளை மறுநாள்) நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என அம்மாநில பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாண்டியாவில் பாஜக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.