13-வது கர்நாடக சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்


13-வது கர்நாடக சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்
x

13-வது கர்நாடக சட்டசபை தேர்தல் கண்ணோட்டம் பற்றி இங்கு காண்போம்.

பெங்களூரு:

கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. இதனால் காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்)கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணியின் முதல்-மந்திரியாக தரம்சிங் இருந்தார். ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி திடீரென்று காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார். பின்னர் அவர் பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். இந்த கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார். தலா 20 மாதங்கள் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி என கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி குமாரசாமி ஆட்சியை தொடர்ந்ததால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அவர் மனம் மாறி பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தார். பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றார். இருப்பினும் இந்த கூட்டணி ஆட்சியில் பல குழப்பங்கள் நிலவியதால் எடியூரப்பா 7 நாளில் முதல்-மந்திரி பதவியை தூக்கி எறிந்து, தேர்தலை சந்தித்தார்.

இதன் தொடர்ச்சியாக 13-வது சட்டசபை தேர்தல் 2008-ம் ஆண்டு மே 10-ந்தேதி, மே 16-ந்தேதி மற்றும் மே 22-ந்தேதி என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 173 பொது தொகுதி எனவும், 36 தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கு எனவும், 15 தொகுதிகள் பழங்குடியினருக்கு எனவும் ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 725 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் 2 கோடியே 5 லட்சத்து 51 ஆயிரத்து 86 பேர் ஆண்களும், ஒரு கோடியே 98 லட்சத்து 12 ஆயிரத்து 639 பெண்களும் அடங்குவர்.

இந்த தேர்தலை பா.ஜனதா எடியூரப்பா தலைமையிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி குமாரசாமி தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சித்தராமையா தலைமையிலும் எதிர்கொண்டன. பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 217 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 222 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 219 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மேலும் சுயேச்சைகள் 944 பேரும் போட்டியிட்டனர். மொத்தம் 31 கட்சிகள் இந்த தேர்தலில் மல்லுக்கட்டின. இருப்பினும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் போட்டிகள் நிலவியது.

3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 2008-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 5 ஆயிரத்து 635 ஆண்களும், ஒரு கோடியே 25 லட்சத்து ஆயிரத்து 931 பெண்களும் என மொத்தம் 2 கோடியே 61 லட்சத்து 7 ஆயிரத்து 566 பேர் வாக்களித்திருந்தனர். இது 64.68 சதவீதமாகும்.

இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 110 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 80 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி வாகை சூடினர். ஆனால் ஆட்சி அமைக்க 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இருப்பினும் 6 சுயேச்சைகள் ஆதரவுடன் பா.ஜனதா கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டு, 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் கட்சிக்குள் அவருக்கு எதிராக எழுந்த போர்க்கொடி, கனிம சுரங்க முறைகேடு புகார் ஆகியவற்றால் எடியூரப்பா 2011-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ஆதரவாளரான சதானந்தகவுடாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்து அரியணையில் அமர்த்தினார்.

அவரும், எடியூரப்பாவுக்கு எதிராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந்தேதி பதவி ஏற்ற சதானந்தகவுடா, 2012-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இவர் 12-8-2012 முதல் 8-5-2013 வரை முதல்-மந்திரியாக இருந்தார். இதற்கிடையே பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய எடியூரப்பா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார்.


Related Tags :
Next Story