கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர்-நடிகைகள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா?


கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர்-நடிகைகள் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இதுவரை கர்நாடக அரசியலில் கன்னட திரைஉலகினர் பெரிய அளவில் தலையிட்டது இல்லை. மேலும் அவர்கள் அரசியல் நிலவரங்கள், விவாதங்கள், பிரசாரங்கள் போன்றவற்றிலும் ஈடுபட்டதில்லை. கன்னட திரைஉலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட மறைந்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன், புனித் ராஜ்குமார் போன்றோர் தங்கள் ரசிகர்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டதில்லை. மறைந்த நடிகர் அம்பரீஷ், ஆனந்த் நாக், பி.சி.பட்டீல் உள்பட வெகுசிலர் மட்டுமே கன்னட திரைஉலகில் இருந்து அரசியலுக்கு வந்தார்கள் எனலாம்.

நடிகை ரம்யா, சுமலதா எம்.பி., திரைப்பட தயாரிப்பாளர் குமாரசாமி போன்றோர் சமீபத்தில் திரைஉலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஆவர். இதில் சுமலதா எம்.பி. தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டபோது அவருக்காக நடிகர்கள் தர்ஷன், யஷ் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலின்போது நடிகர் சுதீப் பா.ஜனதா மந்திரி ஸ்ரீராமுலுவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுபோல் நடைபெற உள்ள தேர்தலிலும் அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்காக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அதுபோல் கன்னட நடிகர் சேத்தன் அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் விமர்சித்து வருகிறார்.

மேலும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளார். நடிகைகள் உமாஸ்ரீ, மாளவிகா அவினாஷ், சுருதி, பாவனா, நடிகர்கள் ஜக்கேஷ், நரேந்திர பாபு உள்ளிட்டோர் தற்போது அரசியல் களத்தில் இருக்கிறார்கள். இதன்மூலம் கன்னட திரைஉலகினரின் பார்வை அரசியல் பக்கம் திரும்பி வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் யாரும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். செய்தது போன்றும், ஆந்திராவில் என்.டி.ஆர். செய்தது போன்றும் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நடைபெற உள்ள தேர்தலிலாவது கன்னட திரைஉலகினர் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1 More update

Next Story