கர்நாடகத்தின் 7-வது முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல்


கர்நாடகத்தின் 7-வது முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல்
x

கர்நாடகத்தின் 7-வது முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் ஆவார்.

பெங்களூரு:

குல்பர்கா (தற்போதைய கலபுரகி) மாவட்டம் சிஞ்சோலியில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்த வீரேந்திர பட்டீல் கர்நாடக மாநிலத்தின் 7-வது முதல்-மந்திரி ஆவார். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 1957-ம் ஆண்டு சிஞ்சோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், முதல்-மந்திரி நிஜலிங்கப்பாவின் மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பதவி வகித்தார். அப்போது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இதனால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நிஜலிங்கப்பா, மாநில முதல்-மந்திரி பதவியில் தனக்கு நெருக்கமான வீரேந்திர பட்டீலை நியமித்தார். அன்றைய கால கட்டத்தில் இவர்கள் 2 பேரும் கட்சியினரால் 'லவ-குச' ஜோடி என அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நிஜலிங்கப்பாவின் அரசியல் தலையீட்டால் மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் செயல் இழந்தது மட்டுமின்றி 2 பேருக்கும் இடையே சில மோதல் சம்பவங்களும் அரங்கேறியது. இதைதொடர்ந்து 33 மாதங்களில் வீரேந்திர பட்டீல் தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 1969-ம் ஆண்டு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த போது வீரேந்திர பட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த கட்சி மாநிலத்தில் 1971-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து 1972-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) கட்சியிடம், இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்) கட்சி படுதோல்வி அடைந்தது.

இதைதொடர்ந்து மாநில கட்சியான ஜனதா கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 1978-ம் ஆண்டு சிக்கமகளூரு தொகுதிக்கு நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திரா காந்திக்கு எதிராக ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கினார். இந்த தேர்தலின் போது வீரேந்திர பட்டீல், இந்திரா காந்திக்கு எதிராக பல தனிநபர் விமர்சனத்தை முன்வைத்தது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் வீரேந்திர பட்டீலிடம் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹெக்டேவிடம், வீரேந்திர பட்டீல் தோல்வி அடைந்தார். இதைதொடர்ந்து ஜனதாகட்சியில் இருந்து விலகிய அவர் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) கட்சியில் ஐக்கியமானார். ஆனாலும் கட்சியில் பல மூத்த தலைவர்களால் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

இந்த நிலையில் இந்திரா காந்தி மறைவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி தலைமையில் செயல்படத் தொடங்கியது. அதையடுத்து கட்சியில் முக்கிய தலைவராக உயர்ந்த வீரேந்திர பட்டீல், 1989-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலை தனது தலைமையில் சந்தித்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 178 தொகுதிகளை கைப்பற்றியது.

வீரேந்திர பட்டீல் 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற போது மாநிலத்தின் நிதி நிலைமை மிகமோசமாக இருந்தது. இதை சரிசெய்ய ராஜசேகர மூர்த்தி என்பவர் நிதித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து மாநில வருவாயை பெருக்க இவர்கள் 2 பேரும் மதுபான வரியை 10 மடங்கு உயர்த்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்மூலம் மாநில அரசு ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்தது எனலாம். அதாவது மாநில வருவாய் உயர்ந்தது மட்டுமின்றி அப்போது மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் வெகுவாக குறைந்தது.

மதுபானம் மீதான வரி 10 மடங்கு உயர்த்தப்பட்டதற்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் மாநில நலன் தான் முக்கியம் எனவும், கட்சியை சேர்ந்தவர்களின் நலன் 2-ம் கட்டம் தான் எனவும் தனது முடிவில் வீரேந்திர பட்டில் உறுதியாக இருந்தார். கடந்த 1990-ம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் மெல்ல மெல்ல அரசியலில் இருந்து விலக தொடங்கினார். மதுபானம் மீதான வரியை உயர்த்தி அன்றைய காலகட்டத்தில் கிராமப்புற பெண்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த வீரேந்திர பட்டீல் கடந்த 1997-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி உயிர் இழந்தார்.


Related Tags :
Next Story