கர்நாடக தேர்தல் பிரசாரம்; ஓட்டலில் தன் கையால் தோசை சுட்ட பிரியங்கா காந்தி


கர்நாடக தேர்தல் பிரசாரம்; ஓட்டலில் தன் கையால் தோசை சுட்ட பிரியங்கா காந்தி
x

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி, அதன் செய்முறையை கற்று கொண்டேன் என கூறியுள்ளார்.

மைசூரு,

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்து உள்ளார்.

அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி, காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கினார். அது நன்றாக இருந்தது என கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்று கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார்.

ஓட்டலின் சமையலறை பகுதிக்கு சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்று கொண்டார்.

ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் சிறிது நேரம் உரையாடினார். அடுத்த முறை வரும்போது தனது மகளையும் அழைத்து வருவேன் என அவர்களிடம் கூறியுள்ளார்.


Next Story