கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்


கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்
x

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

பெங்களூரு

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் வந்துவிட்டாலே கருத்து கணிப்புகளும் வர தொடங்கி விடும். அடுத்த முதல்-மந்திரி யார்? ஆட்சியை பிடிப்பது எந்த கட்சி என்ற கருத்து கணிப்புகள் கர்நாடகாவிலும் வர தொடங்கி உள்ளன. தேர்தல் வேளையில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் ஜாதகம் பார்த்து வெற்றி தோல்வியை கணிப்பது வழக்கம்.

அந்த வழக்கப்படி கர்நாடகாவிலும் வேட்பாளர்கள் சிலர் ஜோதிடர்களை பார்த்து கணித்த பின்பே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். பொதுவாக மனிதர்களான ஜோதிடர்களிடமிருந்து வரும் கணிப்புகளை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் மாண்டியாவில் ஒரு நாய் எதிர்காலத்தை சொல்கிறது, அது இதுவரை கூறிய கணிப்புகள் பொய்யல்ல என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

இந்த நாயை மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் வளர்த்து வருகிறார். பைரவர் பெயரையே இந்த நாய்க்கு சூட்டியுள்ளனர். கோபியின் குடும்பத்தினர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலபைரவரை வழிபட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இந்த நிலையில் கோபி அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்று பைரவா மூலம் கணிக்க திட்டமிட்டார். இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பைரவா நாய்க்கு வழிபாடு நடத்தப்பட்டது. பின்பு தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமி மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரின் புகைப்படங்களை பைரவா முன்பு வைத்தார்.

பிறகு, கோபி பைரவரிடம் இந்த முறை யார் முதல்வர் என்று கேட்கிறார். இதில் எச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை நாய் வாயில் கவ்வி எடுத்தது. இதுகுறித்து நாயின் உரிமையாளர் கோபி கூறியதாவது:-

இந்த பைரவா நாய்க்கு சிறப்பு சக்தி உள்ளது. பைரவா கணிப்பு நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை. சில மாதங்களுக்கு முன்பு எனது தாயார் இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தாயின் உயிர் குறித்து மருத்துவர்கள் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. வீட்டில் நாய் சாப்பிடாமல் கலங்கியது. கடைசியாக ஒரு நாள் காரில் ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

மருத்துவமனையில் நாய்கள் அனுமதிக்கப்படாததால், சக்கர நாற்காலியில் என் தாயை மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றேன். அப்போது அந்த நாய் அம்மாவை மூன்று முறை நக்கி முத்தமிட்டது. அதன் பிறகு எங்கள் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் பூஜை செய்யும் போதும், பூஜை அறையில் பைரவா இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பைரவா கணிப்பு உண்மையாகி வருவதாக கூறப்படுகிறது, எனவே இந்த சட்டசபை தேர்தலில் பைரவரின் கணிப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story