கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்


கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 April 2023 10:23 AM GMT (Updated: 23 April 2023 10:50 AM GMT)

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமாரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 20-ந்தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி புலிகேசி நகரில் அன்பரசன் அ.தி.மு.க. வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அன்பரசனின் தாக்கல் செய்த வேட்பு மனு புலிகேசி நகரில் ஏற்கப்பட்டது. அவர் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதேபோல், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தார். அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து இருந்தார்.

இதில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பில் நெடுஞ்செழியன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. கோலார் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே நேரம் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு சொந்தமானது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, ஓ.பி.எஸ். தரப்பினர் வேட்புமனுவில் அ.தி.மு.க. என குறிப்பிட்டுள்ளதாக ஈ.பி.எஸ். தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கர்நாடக தேர்தல் ஆணையம் காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என வேட்புமனுவில் குறிப்பிட்டதாக கூறப்படும் குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லையென்னில் வேட்பாளர் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story