மனைவியிடம் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்த கணவர் - வழக்கை ரத்து செய்த கர்நாடக ஐகோர்ட்டு


மனைவியிடம் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்த கணவர் - வழக்கை ரத்து செய்த கர்நாடக ஐகோர்ட்டு
x

மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது மனைவி தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததாகவும், குடும்பநல கோர்ட்டு அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்து 2 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருப்பதாகவும், மனைவி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு ரூ.2. லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, மனைவிக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு மற்றும் வழக்கு செலவு ரூ.25 ஆயிரம் வழங்க குடும்ப நல கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து, மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில், "மனுதாரருக்கு வேலை இல்லை, தன்னைப் பராமரிக்க வழி இல்லை, எனவே, மனைவியை பராமரிக்கும் நிலையில் இல்லை, மனைவியிடம் இருந்து பராமரிப்பு வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, கொரோனா காலத்தில் தனது வேலையை இழந்ததால், அவர் சம்பாதிக்க முடியாதவர் என்று கூற முடியாது.

எனவே, கணவன் தனது சொந்த நடத்தையால் மனைவியின் கைகளில் இருந்து பராமரிப்பைப் பெறுவதன் மூலம் நிதானமான வாழ்க்கையை நடத்த முடிவு செய்துள்ளார் என்பது ஏற்க முடியாதது. மேலும், இந்து திருமண சட்டத்தின் 24 வது பிரிவின் கீழ் ஏற்க முடியாத செயலாகும். தன்னையும், மனைவியையும், குழந்தையையும் பராமரிப்பது ஒரு திறமையான கணவனின் கடமை" என்று நீதிபதி குறிப்பிட்டார்.


Next Story