கர்நாடகா ஜனதா தளம் (எஸ்) சட்டசபை வேட்பாளர் மாரடைப்பால் காலமானார்
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சிந்தகி தொகுதிக்கான சட்டசபை வேட்பாளர் சிவானந்தா பாட்டீல் மாரடைப்பால் காலமானார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி உள்ளது. இதுவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்து உள்ள அக்கட்சி, தனித்து இதுவரை ஆட்சியமைத்தது இல்லை.
இந்த முறை மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 123 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற இலக்குடன் அக்கட்சி தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சி அறிவித்தது. அவர்களில், சிந்தகி தொகுதிக்கான கட்சியின் சட்டசபை வேட்பாளராக சிவானந்தா பாட்டீல் (வயது 54) என்பவர் அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தேர்தலுக்கு தயாராவது, தொண்டர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட பணியில் அவர் தீவிரமுடன் இறங்கினார். இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான எச்.டி. குமாரசாமி தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு சிவானந்தா பாட்டீல் காலமானார் என தெரிவித்து உள்ளார்.
அவரது திடீர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த வேதனை அடைந்து உள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையவும், அவரது குடும்பம் இழப்பை தாங்கும் சக்தியை பெறவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என அதில் தெரிவித்து உள்ளார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்கு குமாரசாமி மற்றும் பிற தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சிவானந்தாவுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.