கர்நாடகா; புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக பதவியேற்பு


கர்நாடகா; புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக பதவியேற்பு
x
தினத்தந்தி 20 May 2023 9:09 AM GMT (Updated: 20 May 2023 9:28 AM GMT)

கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதன்பின், நீண்ட இழுபறிக்கு பின்னர் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகியோரது பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது.

இதன்படி, முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, சித்தராமையா மற்றும் கட்சியினர் முறைப்படி நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இதனை தொடர்ந்து, பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடப்பட்டது.

இதன்பின்பு, கர்நாடகாவில் பெங்களூருவில் முதல்-மந்திரியாக சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் ஆகியோர் முறைப்படி இன்று பதவியேற்று கொண்டனர்.

இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை செய்து வைத்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், புதிய மந்திரி சபையில் 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கும், கவர்னர் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

அவர்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே, கட்சியின் எம்.எல்.ஏ.க்களான ஜி. பரமேஷ்வரா மற்றும் எம்.பி. பாட்டீல் உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தவிர, பிற எம்.எல்.ஏ.க்களான முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, ராமலிங்க ரெட்டி மற்றும் ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும் இன்று முறைப்படி மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு முதன்முறையாக இந்த ஸ்டேடியத்திலேயே, சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொண்டார். இதன்பின் அவர் இன்று 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டு உள்ளார். அவருடன், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக இன்று பதவியேற்று கொண்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஷ்கார்), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர்களான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story