உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்த 'ஒய்சாலா கோவில்கள்'


உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒய்சாலா கோவில்கள்
x

கர்நாடக கோவில்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளது.

பெங்களூரு:

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது, யுனஸ்கோ. இது உலகில் உள்ள கோட்டைகள், கோவில்கள், கட்டிட கலையை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து அங்கீகாரம் அளித்து வருகிறது.

ஏற்கனவே கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹம்பியில் உள்ள விருபாக்ஷப்பா கோவில், கல் தேர், விஜயவிட்டலா கோவில், தாமரை மகால் ஆகியவையும், பாகல்கோட்டை மாவட்டத்தில் பட்டதஹல்லு பகுதியில் உள்ள கோவில்களும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ஒய்சாலா கோவில்கள்

இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் பேளூருவில் உள்ள சென்னகேசவா கோவில், ஹலேபீடுவில் உள்ள ஒய்சாலேசுவரர் கோவில், மைசூரு மாவட்டம் சோமநாதபுரத்தில் உள்ள கேசவா கோவில் ஆகியவை உள்ளன.

3 கோவில்களும் ஒய்சாலா மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை. இந்த கோவில்களை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுனஸ்கோ அமைப்புக்கு பரிந்துரை செய்தது.

இந்தியா பரிந்துரை

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் யுனஸ்கோவின் 45-வது கூட்டம் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்களை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஹலேபீடு ஒய்சாலேஸ்வரர் கோவில், பேளூர் சென்னகேசவா கோவில், சோமநாதபுரம் கேசவா கோவில்களை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளது.

இந்த 3 கோவில்களின் சிறப்புகள் பின்வருமாறு:-

ஹலேபீடு ஒய்சாலேஸ்வரர் கோவில்

ஹாசன் மாவட்டம் ஹலேபீடு பகுதியில் உள்ள இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் ஒய்சாலா மன்னரான விஷ்ணுவர்த்தன் என்பவர் கட்டியது. இக்கோவில் 1,121-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் வெளி சுவர்களில் வரிசை வரிசையாக யானைகள், யாளிகள், அன்னங்கள், எண்ணற்ற தெய்வங்களின் சிலைகளை காணலாம். கோவிலின் தென்புறத்தில் நர்த்தக விநாயகர் பெரிய வடிவில் காட்சி தருகிறார்.

கோவிலின் உட்புறத்தில் இரணியன் உடலை கிழிக்்கும் நரசிம்மர், கோவர்த்தன மலையை குடையாக பிடிக்கும் ஆயரை காக்கும் கண்ணன், துவார பாலகர், இவற்றைவிட சிறப்பான நர்த்தன சரஸ்வதி, மேலும் கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரத கதைகளை சித்தரிக்கும் சிற்பங்கள், சுவரின் மேல் பகுதியில் துவாரமிட்ட கல் திரைகள் மற்றும் சிவபெருமான், சக்தி, விஷ்ணு உருவங்கள் உள்ளன. இந்த கோவில் ஒய்சாலா மன்னர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. கோவிலின் தோற்றம் நட்சத்திர வடிவில் உள்ளது. இதனால் நட்சத்திர கோவில் எனவும் இது அழைக்கப்படுகிறது.

இந்து கோவில்களை தவிர சமண கோவில்களும் இங்கு உள்ளன. ஆதி நாத ஈசுவரர், சாந்தேசுவரர், பார்சுவணாதேசுவரர், கோவில்களும் உள்ளன. இவற்றின் தூண்கள் கண்ணாடி போல் பளபளவென மின்னும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகமும் உள்ளது.

பேளூர் சென்னகேசவா கோவில்

ஹாசன் மாவட்டம் பேளூரில் இக்கோவில் உள்ளது. ஒய்சாலா மன்னரான விஷ்ணுவர்த்தனால் 1,117-ம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் ஆனதாம். கோவிலில் நட்சத்திர வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் விஜய நாராயண சாமி சிலை உள்ளது. கோவிலின் வெளிப்புற சுவர்களில் இளம்பெண் நடனம் ஆடுவது போன்ற மனதை கவரும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

கோவிலின் முன்பகுதியில் விஷ்ணுவின் வாகனமான கருடா, கோவிலை பார்த்து வணங்கி நிற்பது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள மண்டபத்தில் மன்னர் விஷ்ணுவர்த்தனின் மனைவி சாந்தலா தேவியின் சிற்பம் உள்ளது. மேலும் இங்கு சென்னிகராயா, வீர நாராயணா, பூதேவி, ஸ்ரீதேவி கோவில்களும் உள்ளன.

சோமநாதபுரம் கேசவா கோவில்

மைசூரு மாவட்டம் சோமநாதபுரத்தில் சென்னகேசவர் என்கிற கேசவா கோவில். இந்த கோவில் ஒய்சாலா மன்னன் 3-ம் நரசிம்மனின் தண்டனை கொடுக்கும் தளபதியான சோமா என்பவரால் 1,268-ம் ஆண்டு கட்டப்பட்டது. பெரிய மதில் சுவரால் சூழப்பட்ட இக்கோவிலின் நுழைவாயிலில் உயரமான தூண்களை கொண்ட ஒரு நுழைவு மண்டபம் உள்ளது. கட்டிடம் மாவு கற்களால் அமைக்கப்பட்டது. சமச்சீரான கட்டிட அமைப்பு கொண்ட இக்கோவில் ஒரு மேடை மீது கட்டப்பட்டுள்ளது. 3 சிறிய கோவில்களும் உள்ளன. இந்த 4 கோவில்களின் முகப்பு மேற்கூரை 16 முனைகளை கொண்ட நட்சத்திர வடிவில் உள்ளது.

மக்கள் மகிழ்ச்சி

இந்த 3 கோவில்களும் ஒய்சாலா மன்னர்களின் கட்டிட பாணியையும், திராவிட கட்டிட பாணியையும் கொண்டுள்ளது. தற்போது இந்த 3 கோவில்களும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் 3 பகுதிகளை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த 3 கோவில்களும் இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில், பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story