முதல்-மந்திரி பதவியில் இருந்து பாதியில் விலகுவேன் என கூறவில்லை - சித்தராமையா


முதல்-மந்திரி பதவியில் இருந்து பாதியில் விலகுவேன் என கூறவில்லை - சித்தராமையா
x

முதல்-மந்திரி பதவியில் இருந்து பாதியில் விலகுவேன் என கூறவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதவி

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். முன்னதாக காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.

இருவருக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதாகவும், முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரியாக பதவி வகிக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒத்துக்கொள்ளாத டி.கே.சிவக்குமாரை, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவி ேசானியாகாந்தி நேரில் அழைத்து சமாதானப்படுத்தினார்.

ஆதரவாளர்கள் கருத்தால் சலசலப்பு

அதையடுத்து சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவ்வப்போது, 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்-மந்திரியாக நீடிப்பார் என கூறி வருகிறார்கள். மந்திரிகள் எம்.பி.பட்டீல், எச்.சி.மகாதேவப்பா, ஜமீர்அகமதுகான் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பதவியை சித்தராமையா 5 ஆண்டுகள் நிறைவு செய்வார் என கூறியுள்ளனர். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

பதவி விலகுவேன் என கூறவில்லை

இந்த நிலையில் சித்தராமையா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நான் எனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன். அதன்பிறகு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என கூறியுள்ளேன். ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பாதியில் விலகுவேன் என எப்போதும் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2½ ஆண்டுகளுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆவார் என கூறப்பட்டு வந்த நிலையில், சித்தராமையாவின் இந்த கருத்து டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் சலசலப்பை உருவாக்கும் என தெரிகிறது.


Next Story