காஷ்மீர்: படகுவீட்டில் திடீர் தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
படகுவீட்டில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகள் 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி உள்ளது. இதில், படகுவீடுகள் உள்ளன. வெளிநாடு, உள்நாடு என அனைத்து சுற்றுலாவாசிகளும் அதிக அளவில் இந்த பகுதிக்கு வருவது வழக்கம். அவர்கள் படகுவீடுகளில் தங்கி, பொழுதுபோக்கி விட்டு செல்வார்கள்.
இந்நிலையில், படகுவீடுகளில் திடீரென தீப்பிடித்து கொண்டது. தீ அடுத்தடுத்து பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் சபீனா, சபரீனா, யங் குல்ஷன், லாலா ருக் மற்றும் கர் பேலஸ் என்ற 5 படகுவீடுகள் தீப்பிடித்து கொண்டன. படகுவீடுகளில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகள் தீயில் சிக்கி கொண்டனர்.
இந்த தீ விபத்தில் மொத்தம் 3 சுற்றுலாவாசிகள் உயிரிழந்தனர். அவர்கள் அனிந்தயா கவுசல், தாஸ் குப்தா மற்றும் முகமது மொய்னுத் என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் சபீனா படகுவீட்டில் தங்கியிருந்தபோது, இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ, பற்றி பரவியதில், 7 குடிசைகள் மற்றும் அருகேயுள்ள வீடுகள் ஆகியவையும் எரிந்து போயின.
இந்த படகுவீட்டில் தங்கியிருந்தவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை ஸ்ரீநகர் போலீசார், காஷ்மீர் பேரிடர் பொறுப்பு படை மற்றும் பொதுமக்கள் இணைந்து உடனடியாகவும், தைரியத்துடனும் செயல்பட்டு அவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
இதுபற்றி ஆர்.எம். பாக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.