பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய கட்சி: சந்திரசேகர் ராவ் அதிரடி முடிவு! விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்


பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய கட்சி: சந்திரசேகர் ராவ் அதிரடி முடிவு! விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2022 4:13 PM IST (Updated: 11 Jun 2022 4:14 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர ராவ் தேசிய அளவில் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர ராவ் தேசிய அளவில் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக சிவசேனா, திமுக, ஆர்ஜேடி, எஸ்பி மற்றும் ஜேடி (எஸ்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கேசிஆர் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஆனால், பிஜேபி மற்றும் காங்கிரஸ்க்கு எதிரான சக்திகளை ஒரு பொது மேடையில் கொண்டு வர முடியவில்லை.

இதனை தொடர்ந்து, தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் விருப்பத்தை சந்திர சேகர ராவ் ஏற்கனவே வெளிப்படுதியுள்ளார். மேலும், டெல்லி முதல்வர் அரவித் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முன்னாள் பிரதமரும் ஜனதா தளம்(எஸ்) தலைவருமான தேவகவுடா ஆகியோரை கடந்த மாதம் அவர் சந்தித்து பேசினார்.

சந்திர சேகர ராவ்(கேசிஆர்) நேற்று அம்மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நீண்டநேர கலந்துரையாடலில் ஈடுபட்டார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, அவர் தனது நெருங்கிய வட்டத்தினருடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விவாதித்தார்.

முடிவில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்ற புதிய கட்சிக்கு ஒருமனதாக அனைவரும் ஒப்புக்கொண்டதாக அறியப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த புதிய கட்சியை பதிவு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) நிர்வாகிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜூன் 19ம் தேதி புதிய கட்சி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்சிக்கான முறையான அறிவிப்பை ஜூன் இறுதிக்குள் புதுடெல்லியில் அவர் வெளியிட உள்ளார். டிஆர்எஸ் கட்சியின் சின்னமான 'கார்' புதிய கட்சியான பிஆர்எஸ்-க்கும் வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார் எனவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story