சூடு வைத்து, சூனியக்காரி பட்டம்: மனித கழிவுகளை உண்ண 4 பெண்களை கட்டாயப்படுத்திய கொடூரம்
ஜார்க்கண்டில் 4 பெண்களை சூனியக்காரி பட்டம் சூட்டி, சூடு வைத்து, மனித கழிவுகளை உண்ண கூறி கிராமவாசிகள் கட்டாயப்படுத்திய கொடூரம் நடந்துள்ளது.
தும்கா,
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் சரையாஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் சிலர் ஒரு குடும்பத்தில் உள்ள 4 பெண்களை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை சூனியக்காரிகள் என பட்டம் சூட்டியுள்ளனர்.
இதன்பின்னர், இரும்பு தடியை சூடாக்கி, அதனை கொண்டு அவர்கள் உடலில் சூடு போட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அதனுடன் விடாமல், மனித தன்மையற்ற செயலிலும் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் 4 பேரையும் மனித கழிவுகளை உண்ணும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி அறிந்த சரையாஹாத் காவல் நிலையத்தின் உயரதிகாரி வினய் குமார் தலைமையிலான போலீசார், சம்பவ பகுதிக்கு சென்று அந்த பெண்களை மீட்டு சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி போலீசாரிடம் அந்த பெண்களின் குடும்பத்தினர் கூறும்போது, ஜோதின் என்பவர் மற்ற கிராமவாசிகளான முனி சோரன், லக்கிராம் முர்மு, சுனில் முர்மு, உமேஷ் முர்மு மற்றும் மங்கள் முர்மு ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன்பின்பு, அவர்களை இதுபோன்று செய்யும்படி தூண்டி விட்டுள்ளார் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து 6 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அவர்களை விரைவில் சிறையில் தள்ளுவோம் என்றும் உயரதிகாரி வினய் குமார் கூறியுள்ளார்.