கெஜ்ரிவால் கைது விவகாரம்; 'இந்தியா' தக்க பதிலடி கொடுக்கும் - ராகுல் காந்தி


கெஜ்ரிவால் கைது விவகாரம்; இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் - ராகுல் காந்தி
x

பயந்துபோன சர்வாதிகாரி மாண்டுபோன ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பயந்துபோன சர்வாதிகாரி மாண்டுபோன ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றியதும், கட்சிகளை உடைத்ததும், நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்ததும், பிரதான எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவதும் 'அசாதாரண சக்தி'க்கு போதாதென்று, தற்போது முதல்-மந்திரிகளை கைது செய்வதும் சகஜமாகி விட்டது. இதற்கு 'இந்தியா' தக்க பதிலடி கொடுக்கும்."

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.


Next Story