2 மகள்களை பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: திருவனந்தபுரம் கோர்ட்டு தீர்ப்பு
மகள்களின் தாயார் வேலை நிமித்தம் காரணமாக வேறொரு இடத்தில் தங்கி உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 40 வயது தொழிலாளிக்கு மனைவியும், 6 மற்றும் 8 வயதில் என 2 மகள்களும் உள்ளனர். தொழிலாளியின் மனைவி வேலையின் நிமித்தமாக வேறொரு இடத்தில் தங்கி உள்ளார். இதனால் மகள்கள் 2 பேரும் சில நாட்கள் தந்தையின் வீட்டிலும், சில நாட்கள் பாட்டியின் வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 6 வயதான சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சிறுமியின் பாட்டி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுபற்றி டாக்டர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, சிறுமியிடம் மதுபோதையில் அவரது தந்தையே அத்துமீறிய கொடூர சம்பவம் வெளியானது. மேலும் அவர் 8 வயதான மகளையும் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவனந்தபுரம் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஒரு மகளை பலாத்காரம் செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகளை பலாத்காரம் செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், தந்தை என்ற பெயருக்கும், நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.