கேரளா: கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்தபடி பிரதமரை காண குவிந்த மக்கள்
கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை காண கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்தபடி மக்கள் குவிந்து இருந்தனர்.
திருவனந்தபுரம்,
கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதன் ஒரு பகுதியாக அவர் கேரளாவின் கொச்சி நகருக்கு இன்று வருகை தந்துள்ளார்.
முதலில் கொச்சியில் நடந்த பா.ஜ.க. கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அதில், நாட்டிலுள்ள ஒவ்வோர் ஏழைக்கும் வீடு வழங்குவதற்கான பிரசாரத்தில் நம்முடைய அரசு ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, கேரள ஏழைகளுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவற்றில் 1.3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்றும் பேசினார்.
அமுதத்திற்கான சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தீர்மானத்தின்படி பணி நடந்து வருகிறது. இதில், கேரள மக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். தீர்மானங்களை பா.ஜ.க. செய்து முடிக்கிறது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியையாவது தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அது கேரள இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். கேரளாவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பா.ஜ.க. அரசு பல்வேறு திட்ட பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்பின்பு, கேரளாவின் கொச்சி நகரில் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் மற்றும் பிற திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அவர் புறப்பட்டு சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு, வழியெங்கும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
கேரளாவில் பருவகால மழை பெய்து வரும் சூழலில், கொட்டும் மழைக்கு இடையிலும், சிலர் குடைகளை பிடித்தபடியும், மக்கள் மழையில் நனைந்தபடியும் அவரை காண காத்திருந்தனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு கொச்சியில் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.