கார்கேவின் வெற்றியை காங்கிரசின் வெற்றியாகவே எடுத்து கொள்ள வேண்டும்: சசி தரூர் பேட்டி


கார்கேவின் வெற்றியை காங்கிரசின் வெற்றியாகவே எடுத்து கொள்ள வேண்டும்:  சசி தரூர் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2022 6:40 PM IST (Updated: 19 Oct 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

கார்கேவின் வெற்றியை காங்கிரசின் வெற்றியாகவே எடுத்து கொள்ள வேண்டும் என சசி தரூர் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,


கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வி கண்டார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துளளார்.

தேர்தலில் கார்கே வெற்றி பெற்ற நிலையில், சக போட்டியாளரான சசி தரூர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த பேட்டியில், அவரது (மல்லிகார்ஜூன கார்கே) இல்லத்திற்கு சென்று, அவர் பெற்ற வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.

அவர் ஒரு மூத்த தலைவர். கட்சியை அவர் எப்போதும் வழிநடத்துவார். ஆயிரம் பேர் வரை எனக்கு வாக்களித்ததில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய தொண்டர்களே கட்சியின் உண்மையான பெருமைக்கு உரியவர்கள்.

கார்கேவின் வெற்றியை நாம், காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே நினைக்க வேண்டும். இது ஒரு நபருக்கான தேர்தல் அல்ல. கட்சியை பற்றிய தேர்தல். கட்சியை பலப்படுத்தவே எப்போதும் நான் விரும்பினேன். ஏனெனில் காங்கிரசை பலப்படுத்துவதே நாட்டுக்கு மிக முக்கியம் என கூறியுள்ளார்.


Next Story