பாவகடா சோலார் பூங்கா திட்டத்தில் முறைகேடு; குமாரசாமி குற்றச்சாட்டு


பாவகடா சோலார் பூங்கா திட்டத்தில் முறைகேடு; குமாரசாமி குற்றச்சாட்டு
x

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாவகடா சோலார் பூங்கா திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

துமகூரு:

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாவகடா சோலார் பூங்கா திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடு

காங்கிரஸ் ஆட்சியில் பாவகடாவில் சோலார் பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. தற்போது இருக்கும் அரசு, இந்த முறைகேடு பற்றி மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயிகளின் சொத்து ஆவணங்களை மாற்றி, முறைகேடு செய்யப்பட்டுள்ளது. சோலார் பூங்கா அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவினர் வாய் வார்த்தையில் பேசி மட்டுமே வருகின்றனர்.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என்று பா.ஜனதா தலைவர்கள் பொய் பேசி வருகிறார்கள். சோலார் பூங்கா அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்திருப்பதால், அதுகுறித்து அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்.

காலம் தாழ்த்தி வருவது ஏன்?

முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தால், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது ஏன்? என்று தெரியவில்லை. கர்நாடகத்தில் மராட்டிய பவன் கட்டப்படும் என்று, அந்த மாநில அரசு கூறி வருகிறது. மும்பையில் கர்நாடகத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளது. மும்பையில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக பவன் அமைக்கப்பட வேண்டும்.

கர்நாடகம்-மராட்டிய அரசுகள் தங்களது குறைகளை மூடி மறைக்க எல்லை பிரச்சினையில் அரசியல் செய்கிறது. மராட்டிய மந்திரிகள்ள பெலகாவிக்கு வருவதை கர்நாடகம் அனுமதிக்க கூடாது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story