கொலையான பிறகு கூக்குரல் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை; குமாரசாமி கருத்து
கொலையான பிறகு கூக்குரல் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்றும், பா.ஜனதா அரசு மெத்தனமாகி விட்டது என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கொலையான பிறகு கூக்குரல் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்றும், பா.ஜனதா அரசு மெத்தனமாகி விட்டது என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
மெத்தனமாகிவிட்டது
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பிரவீன் நெட்டார் என்ற பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு கூக்குரல் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை. சிவமொக்காவில் ஹர்ஷா கொலை சம்பவத்திற்கு பிறகு இந்த பா.ஜனதா அரசு மெத்தனமாகிவிட்டது ஏன்?. இத்தகைய கொலைகளை அரசு முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
தேர்தல் நெருங்கும்போது இத்தகைய கொலைகள் நடைபெறுகிறது. இதில் அரசியல் விளையாட்டு உள்ளதா?. இதற்கு முன்பு கொலை செய்யப்பட்ட மனோஜ் என்பவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது கொலையான பிரவீன் நெட்டாருவும் ஏழை. உழைக்கும் ஏழை மக்களின் குழந்தைகளே கொலை செய்யப்படுகிறார்கள்.
மனிதநேயம் கிடையாது
அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளின் குழந்தைகள் இத்தகைய வன்முறையில் தென்படுவது இல்லை. கர்நாடகத்தில் சில அமைப்புகள் இளைஞர்களை திசை திருப்பி சுயநலத்திற்காக மரண வாசலில் தள்ளுகிறார்கள். இந்த விஷயத்தில் பெற்றோர் மற்றும் இளைஞர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ரத்த பிசாசுகளுக்கு மனிதநேயம் என்பது கிடையாது.
இத்தகைய சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு தைரியம் இல்லை. இந்த இயலாமைக்கு காரணம் என்ன?. ஒவ்வொரு கொலைக்கும் அரசியலை தொடர்புப்படுத்துவது மிக மோசமான செயல். கர்நாடகம் அனைத்து தரப்பு மக்களின் அமைதி பூந்தோட்டம். அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ள மாநிலம். உணர்வு பூர்வமான விஷயங்களை முன்வைத்து வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களில் கர்நாடகத்தில் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் தொழில் நிறுவனங்கள் வேறு பகுதிக்கு சென்றால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.