36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு


36 செயற்கைகோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - உள்துறை மந்திரி அமித் ஷா பாராட்டு
x

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய ராக்கெட்டான 'எல்விஎம் 3' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களுடன், ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து அதிகாலை 12.07 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஜிஎஸ்எல்வி எம்கே 3' என்று அழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற்போது 'எல்விஎம் 3' என்று அழைக்கப்படுகிறது. இது 43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தவகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். வணிக ரீதியில் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து சென்றது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு ஒரு முக்கிய நாள்! இந்தியாவின் மிக கனமான ராக்கெட் எல்விஎம்3, 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக ஏவியதன் மூலம், இந்தியா தற்சார்பு அடைந்த புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது விஞ்ஞானிகளுக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story