மராட்டியத்தில் நிலச்சரிவு: 16 பேர் உயிரிழப்பு; பலர் சிக்கியுள்ளனர் என அச்சம்
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ராய்காட்,
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் இர்ஷல்வாடி கிராமத்தில் கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. 17 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன.
இந்த சம்பவத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் மொத்த உயிரிழப்பு 16 ஆக உயர்ந்து உள்ளது என போலீசார் இன்று தெரிவித்தனர்.
எனினும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிவாரண மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உதவி தொகையும் அறிவித்துள்ளார். இதுவரை 22 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.