சுயமரியாதை திருமணங்களை வக்கீல்கள் நடத்திவைக்கலாம்-சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


சுயமரியாதை திருமணங்களை வக்கீல்கள் நடத்திவைக்கலாம்-சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வக்கீல்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்திவைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018-ல் என் மனைவி மைனராக இருந்தபோது அவரது பெற்றோர் குழந்தை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் மாவட்ட குழந்தைகள்நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதனால் குழந்தை திருமண நடவடிக்கையை கைவிட்டு, படிக்கவைப்பதாக அதிகாரிகளிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் அதை மீறி உறவினருக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறி, கடந்த மாதம் என்னை திருப்பூரில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார்.

வீட்டில் இருந்த என் மனைவியை அவரது பெற்றோரும், உறவினர்களும் கடந்த 3-ந் தேதி கடத்திச்சென்றனர். எனவே என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார்ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே ஒருமுறை இதேபோல் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண், தன்னை யாரும் கடத்தவில்லை, தான் விரும்பியே சென்றதாக கூறினார். குழந்தை திருமணமாக இருந்தாலும், அதை சட்டப்படிதான் ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாமல் மறுதிருமணம் செய்ய முடியாது. சுயமரியாதை திருமணமாக இருந்தால் வக்கீல் முன்னிலையில் திருமணம் நடந்ததாக திருமணச் சான்று வழங்க முடியாது என ஏற்கனவே ஒரு வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என கூறப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வக்கீல் முன் நடந்த திருமணம் செல்லாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் தனது முன்னிலையில் நடந்ததாக சான்று அளித்த வக்கீல் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எங்கும் இதேபோல் திருமணம் நடந்ததாக யாராவது சான்றிதழ் வழங்கினால் அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக இளவரசன் சார்பில் வக்கீல் ஏ.வேலன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.ரவீந்திரபட், அரவிந்த்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரரின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வக்கீல்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்திவைக்கலாம். தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தை நாகலிங்கம் எதிர் சிவகாமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2001-ம் ஆண்டு உறுதி செய்துள்ளது. தொழில்முறையில் அல்லாது தனிப்பட்ட முறையில் இதுபோன்ற திருமணங்களை வக்கீல்கள் நடத்திவைக்கலாம் என்று கூறி, ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பை ரத்து செய்தது.


Next Story