முற்போக்கான, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி கொள்வோம்: துணை ஜனாதிபதி


முற்போக்கான, வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி கொள்வோம்: துணை ஜனாதிபதி
x

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தை நாம் இன்று கொண்டாடும் போது, நமது சுதந்திரம் எவ்வளவு கடினமாகப் போராடி கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒடுக்குமுறையான காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுத்தந்த தியாகமும், வீரமும் மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் சுதந்திர தினம்.

இந்த நாள் நவீன இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, நிலையான மற்றும் வலுவான குடியரசின் அடித்தளத்தை அமைத்தது. இன்று இந்தியா அனைத்து மட்டத்திலும் வளர்ச்சியின் பாதையில் முன்னேறி, ஆற்றல் நிறைந்த நாடாக உள்ளது.

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேசபக்தி, தியாகம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை இளைய தலைமுறையினருக்கு ஊக்குவிப்பதற்கு, நமது மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நினைவு கூர்ந்து மீண்டும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.

இந்த சுதந்திர தினத்தன்று, அரசியலமைப்பு விழுமியங்களின் நாகரீக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பித்து, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான மற்றும் வளமான இந்தியாவைக் கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story