வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் மத்திய அரசுக்கும் தொடர்பு; ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு


வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் மத்திய அரசுக்கும் தொடர்பு; ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் முறைகேடு, அவர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம் மக்கள் முன்னிலையில் உள்ளது. இந்த முறைகேட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மட்டுமல்ல, பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது. வாக்காளர்களின் தகவல்கள் மட்டுமின்றி மாநிலம், நாட்டின் பணத்தையும் கொள்ளையடிக்கிறார்கள்.

மத்திய அரசின் சிட்டிசன் சேவை மையத்தின் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சிலுமே நிறுவனத்தின் நிர்வாகி ரவிக்குமாருக்கும் பணம் சென்றுள்ளது. ரவிக்குமார் மற்றும் அவரின் நண்பர்களுக்கு மத்திய அரசின் நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பணத்தை பெற்றவர்கள் யார்-யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் தகவல் திருட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முக்கிய நபராக உள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.


Next Story