பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும் அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா? காங்கிரஸ் கேள்வி


பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும் அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா?  காங்கிரஸ் கேள்வி
x

பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும், அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

காங்கிரஸ் கேள்விகள்

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது. விமர்சனங்களையும் செய்து வருகிறது. அதானி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அந்த கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியும் வருகிறது.

அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி நேற்று 3 கேள்விகளை எழுப்பி, பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்குமாறு வலியுறுத்தி உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கிக்கு அறிவுறுத்தலா?

* அதானி எண்டர்பிரைசஸ் எப்.பி.ஓ. பங்கு வெளியீட்டில் முக்கிய முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. ரூ.299 கோடிக்கும், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு ரூ.99 கோடிக்கும், எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் ரூ.125 கோடிக்கும் ஏலம் கேட்டுள்ளன. வெளியீட்டு விலையை விட சந்தை விலை மிகக்குறைவாக இருந்தபோதும், எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி என இரு நிறுவனங்களும் ஏற்கனவே அதானி நிறுவனங்களின் பெரும் பங்குகளை வைத்திருந்தாலும், எப்.பி.ஓ.வில் பங்கெடுத்துள்ளன. அதானி குழுமத்தை மீண்டும் சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதற்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் சேமிப்பைப் பயன்படுத்த எல்.ஐ.சி.க்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டனவா?

மத்திய மந்திரி தனிப்பட்ட முறையில் பேச்சா?

* கவுதம் அதானியின் சார்பாக, நீண்ட கால வர்த்தக தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு முக்கிய மத்திய மந்திரி, 5 அல்லது 6 பிரபல தொழில் அதிபர்களுக்கு தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை நடத்தி, கவுதம் அதானியை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற எப்.பி.ஓ. பங்களிப்பில் தங்கள் தனிப்பட்ட நிதியை முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது உண்மையா? இந்த மத்திய மந்திரி உங்கள் (பிரதமர்) அறிவுரையின்படி செயல்பட்டாரா?

* அதானி மீண்டு வருவதற்காக எப்.பி.ஓ, விஷயத்தில், இது அதானியின் நற்பெயரைக் காப்பாற்ற மட்டுமே என்றும், எப்.பி.ஓ. ரத்து செய்யப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பத்தரப்படும் என்றும் குடும்ப அலுவலகங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா, அப்படியென்றால் இந்த தொடர்புடைய தகவலை பெரும்பாலான முதலீட்டாளர்களிடம் இருந்து மறைத்து, குறிப்பிட்ட சிலருடன் மட்டும் பகிர்வது இந்திய பங்கு விதிமுறைகளை மீறுவது இல்லையா? எப்.பி.ஓ. முதலீட்டாளர்களை இவ்வாறு ஏமாற்றுவது சரியான நெறிமுறையா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story