நாடாளுமன்ற தேர்தல்: மார்ச் 13க்குப் பிறகு அட்டவணை வெளியீடு?


நாடாளுமன்ற தேர்தல்: மார்ச் 13க்குப் பிறகு அட்டவணை வெளியீடு?
x

மக்களவை தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி இந்தியர்கள் தகுதி பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பை அனேகமாக வரும் மார்ச் 13-14 தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை வரும் மார்ச் 13க்குப் பிறகு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட சில தகவல்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மக்களவை தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி இந்தியர்கள் தகுதி பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2019 முதல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 6% அதிகரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்பை ஆணையம் வெளியிட்டவுடனேயே, வழக்கம்போல, தேர்தல் நடத்தை நெறிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். 2019 மக்களவைத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவு பற்றிய அறிவிப்பு, மார்ச் 10 ஆம் தேதியும் 2014 -ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் 5 -ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.


Next Story