கடவுள் ராமர் எனது கனவில் வந்து... பீகார் மந்திரி மீண்டும் சர்ச்சை பேச்சு


கடவுள் ராமர் எனது கனவில் வந்து... பீகார் மந்திரி மீண்டும் சர்ச்சை பேச்சு
x

பீகாரில் கல்வி மந்திரியாக பதவி வகித்து வரும் சந்திரசேகர் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

சுபால்,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடந்து வருகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. அவரது மந்திரி சபையில் கல்வி மந்திரியாக பதவி வகித்து வருபவர் சந்திரசேகர்.

இந்நிலையில், அவர் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, கடவுள் ராமர் என்னுடைய கனவில் தோன்றினார். அவர் என்னிடம் பேசும்போது, மக்கள் என்னை மோசம் செய்கின்றனர். சந்தையில் என்னை விற்கின்றனர்.

அவர்கள் என்னை விற்பதில் இருந்து காக்க வேண்டும். அது இந்த பூமிக்கு பெரிய பலனளிக்கும் என கூறினார் என்று மந்திரி சந்திரசேகர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், கடவுள் ராமர் சாதி முறைக்கு எதிராக இருந்தவர். ராம்ஜி விரும்பிய வழியில் நாட்டை உருவாக்குவோம். அதன்பின்னர், அமெரிக்காவை எப்படி நாம் பின்னுக்கு தள்ளுவோம் என பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரான சந்திரசேகர் கடந்த 14-ந்தேதி பேசும்போது, 56 வகையான உணவு வகைகளை செய்து அவற்றில் பொட்டாசியம் சயனைடை கலந்து விட்டால், நீங்கள் உண்ண முடியுமா? இதே விசயம் இந்துத்துவத்தின் புனித நூல்களிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளன என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


Next Story