இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட 4 மாநிலங்கள்.. எவ்வளவு அளவு தெரியுமா?
நான்கு மாநிலங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
புதுடெல்லி:
தமிழ்நாடு, கர்நாடகா, மேகாலயா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகாக பதிவாகியிருந்தது.
கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்திலும் (3.1 ரிக்டர்), மேகாலயாவில் ஷில்லாங்கிலும் (3.8 ரிக்டர்), குஜராத்தில் ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவிலும் (3.9 ரிக்டர்) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மீண்டும் நில அதிர்வு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வெகுநேரம் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் நின்றிருந்தனர். அதன்பின்னர் நில அதிர்வு எதுவும் ஏற்படாததால் வீடுகளுக்கு சென்றனர்.
இந்த நான்கு மாநிலங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.