மத்திய பிரதேசம்; கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி


மத்திய பிரதேசம்; கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
x

காரை ஓட்டி வந்த சவுரப், விமான போக்குவரத்து அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

குணா,

மத்திய பிரதேசத்தில் குணா மாவட்டத்தில் கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நியூ சிட்டி காலனி பகுதியருகே பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆனந்த் ரகுவன்ஷி மற்றும் கமலேஷ் யாதவ் இருவரும் நேற்றிரவு ஸ்கூட்டர் ஒன்றில் சென்றனர்.

கமலேஷ், மோகன்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார். அந்த பகுதியில், மனோஜ் தகத் என்பவரின் வருகைக்காக அவர்கள் இருவரும் சாலையோரம் ஸ்கூட்டரில் இருந்தபடி காத்திருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் ஒன்று இவர்களுடைய வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், கமலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். ரகுவன்ஷி சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். விபத்தில், தகத் படுகாயமடைந்து உள்ளார். அவர் இந்தூர் நகருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

காரை ஓட்டி வந்த சவுரப் யாதவ் என்பவர் விமான பயிற்சி பெற்று வந்துள்ளார். அவருடன் மற்றொரு பயிற்சி விமானியான ஐதராபாத் நகரை சேர்ந்த ஆபாஷ் என்பவர் சென்றுள்ளார். இருவரும் விமான போக்குவரத்து அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இந்த விபத்தில், ஸ்கூட்டர் நொறுங்கி போனது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, இருவரையும் கைது செய்தனர். விபத்தில் தொடர்புடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கட்சி பிரமுகர் மறைவையடுத்து, மத்திய விமான போக்குவரத்து மந்திரியான ஜோதிராதித்ய சிந்தியா, அதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய இன்றைய நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ரத்து செய்துள்ளார்.

அவர் குணா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக இந்த முறை போட்டியிடுகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் வெளியிட்டு உள்ளார்.


Next Story