மத்தியப் பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: நீந்தி தப்பித்த 24 மாணவர்கள்


மத்தியப் பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: நீந்தி தப்பித்த 24 மாணவர்கள்
x

மத்தியப் பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தின் போது அதில் பயணம் செய்த 24 மாணவர்கள் நீச்சல் அடித்து தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சோன் ஆற்றில் மாணவர்கள் படகில் சென்றனர். மாணவர்கள் ஆற்றின் மறுமுனையில் உள்ள கல்வி நிலையத்தை அடைய படகில் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது தீடீரென படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீரில் தத்தளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீச்சல் அடித்து பத்திரமாக கரையை அடைந்தனர்.

இச்சம்பவம் மாவட்டத் தலைமையகத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சச்சாய் பகுதியில் காலை 10:30 மணியளவில் நடந்ததாக அனுப்பூர் துணைப் பிரதேச மாஜிஸ்திரேட் கமலேஷ் பூரி தெரிவித்தார்.

மேலும் "படகில் இருந்த 24 மாணவர்களும் படகில் இருந்து குதித்து நீந்திப் பாதுகாப்பாக வெளியேறினர். படகு கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபோது மாணவர்கள் தங்கள் கல்வி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்" என்று அவர் கூறினார்.

இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் படகினைப் பயன்படுத்தியே ஆற்றின் மறுகரையில் உள்ள கல்வி நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. பாலம் அமைத்துத் தர வேண்டி கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.


Next Story