மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்


மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
x

மசோதா நிறைவேறியதும் சட்டமன்றத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜரங்கே கடந்த 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று மும்பைக்கு பேரணியாக வந்த அவர், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

கோரிக்கைகள் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன் என கூறினார். இதற்காக தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை தேர்வு செய்திருந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு முன்பாகவே, அவரது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிட்டார். மனோஜ் ஜரங்கேவுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இடஒதுக்கீடு குறித்த அரசுத் தீர்மானத்தை மாநில அரசு வெளியிட்டது.

ஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனோஜ் ஜரங்கே கடந்த 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்நிலையில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இடஒதுக்கீடு அமலுக்கு வந்ததும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story