மோடிக்கு ஆதரவாக இருந்த பால்தாக்கரே கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புகிறது- சிவசேனா கருத்து


மோடிக்கு ஆதரவாக இருந்த பால்தாக்கரே கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புகிறது- சிவசேனா கருத்து
x

குஜராத் கலவரத்திற்கு பிறகு உலகமே மோடிக்கு எதிராக நின்ற போதும் அவருக்கு ஆதரவாக இருந்த பால் தாக்கரேவின் கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புவதாக சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

குஜராத் கலவரத்திற்கு பிறகு உலகமே மோடிக்கு எதிராக நின்ற போதும் அவருக்கு ஆதரவாக இருந்த பால் தாக்கரேவின் கட்சியை பா.ஜனதா அழிக்க விரும்புவதாக சிவசேனா கூறியுள்ளது.

சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் அழிந்துவிடும் என பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேசியிருந்தார்.

இந்தநிலையில் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு ஒட்டு மொத்த உலகமே அப்போதை அந்த மாநில முதல்-மந்திரி மோடிக்கு எதிராக நின்றது, அப்போது இந்துதுவாவுக்காக மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே என சிவசேனா கூறியுள்ளது.

மேலும் அந்த கட்சி சாம்னாவில் கூறியிருப்பதாவது:- குஜராத் கலவரத்தின் போது அவரது சொந்தகட்சியினரே அவருக்கு ராஜ தர்மத்தை பற்றி யோசனை கூறினர். அந்த நேரத்தில் ' ராஜ தர்மத்தை ஒரமாக வையுங்கள், மோடி மீது கைவைக்க கூடாது. அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க கூடாது ' என கூறியவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே. குஜராத் கலவரத்திற்கு பிறகு பால் தாக்கரே தான் மோடிக்கு ஆதரவாக நின்றார்.

தற்போது நீங்கள் (பா.ஜனதா) சிவசேனாவை அழிக்க விரும்புகிறீர்கள்?. சிவசேனா 25 ஆண்டுகளாக பா.ஜனதாவை தோளில் சுமந்து வந்தது. இன்று 2 கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று பா.ஜனதா மராட்டியத்தில் பால்தாக்கரேவின் பெயரை பயன்படுத்தி வருகிறது. பா.ஜனதாவால் சிவசேனாவுடன் மோத முடியாது என்பதால், அவர்களை அமலாக்கத்துறை மூலம் பயம் காட்டி கட்சியை உடைத்து உள்ளனர். உங்களுக்கு அதிகம் பேர் கிடைக்கலாம். ஆனால் பால் தாக்கரே சிவசேனா மீண்டும் வான் உயரத்தை அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story