மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி
மராட்டிய சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றிமும்பை,
மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், கடந்த 1½ ஆண்டுகளாக காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மராட்டிய சட்டசபை முதல் முறையாக நேற்று காலை 11 மணிக்கு கூடியது.
பா.ஜனதா வெற்றி இதையடுத்து நடந்த சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் பொறுப்பு சபாநாயகராக இருந்து புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினார். முடிவில் சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 ஓட்டுக்களே கிடைத்தன.
இந்தசூழலில் இன்று (திங்கட்கிழமை) மராட்டிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் மராட்டிய சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே 164-99 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 3 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.