மராட்டியம்: நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி நிறுத்தம்; 57 உடல்களின் கதி...?
மராட்டியத்தில் நிலச்சரிவில் 57 பேரின் உடல்கள் மீட்கப்படாத நிலையில் சுகாதார பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், ராய்காட் மாவட்டத்தில் இர்ஷல்வாடி கிராமத்தில் கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை நிலைமை தீவிரமடைந்தது.
இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உள்ளூர் போலீசார், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோப்ப நாய் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
நிலச்சரிவு சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியிட்டார்.
இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் இருவரையும் இழந்து உள்ளனர். இந்த குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களது பாதுகாவலராக செயல்படுவேன் என்றும் முதல்-மந்திரி ஷிண்டே அறிவித்து உள்ளார். அநாதைகளான 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை ஸ்ரீகாந்த் ஷிண்டே அறக்கட்டளை கவனித்து கொள்ளும்.
அந்த பகுதியில், 4 நாட்களாக நடந்த சவாலான மீட்பு பணியை தொடர்ந்து, மாநில அரசு மீட்பு பணியை நிறுத்தி கொள்கிறது என அறிவித்து உள்ளது. எனினும், இன்னும் 57 உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன.
அந்த கிராமத்தில் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. உடல்கள் அழுகிய நிலையில், அதிகாரிகளின் சுகாதாரம் உள்ளிட்ட விசயங்கள் பாதிக்கப்பட கூடும். வெள்ளம், நிலச்சரிவு என முன்பே கடின சூழலில், மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு, இன்னும் கூடுதலாக சிக்கலான நிலைமையை ஏற்படுத்தும்.
இதனை கவனத்தில் கொண்டு மீட்பு பணி நிறுத்தப்படுகிறது என தேசிய பேரிடர் பொறுப்பு படை அறிவித்து உள்ளது. கனமழைக்கு இடையே இதுவரை 27 உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளது. 143 பேரை உயிருடன் மீட்டனர். மழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.