மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் - சஞ்சய் ராவத் அதிரடி


மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் - சஞ்சய் ராவத் அதிரடி
x

மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் 2019-ல் நடந்த தேர்தலில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களை கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் சுயேட்சைக்குள் உதவியுடன் 167 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். 40 எம்.எல்.ஏ.க்களில் 33 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, தன்னிடம் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், 6 சுயேட்சைகள் என 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.

இதனை தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தனக்கு ஆதரவாக உள்ள 40 எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் பூதாகாரமாகி வரும் நிலையில் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டார்.

ஏக்நாத் ஷிண்டே மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மாநில மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் அரசின் நிலைத்தன்மை, ஏக்நாத் ஷிண்டே உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மராட்டிய அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது மராட்டிய அரசியலில் நிலவி வரும் குழப்பமான சூழ்நிலை மாநில சட்டசபையை கலைக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story