'மகாத்மா காந்தியின் சித்தாந்தம் எப்போதும் உலகத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்' - ஜனாதிபதி திரவுபதி முர்மு
மகாத்மா காந்தியின் வலுவான மற்றும் துடிப்பான சித்தாந்தம் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 2-ந்தேதி) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-
"தேசப்பிதா மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளில் அனைத்து குடிமக்கள் சார்பாக எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளான உண்மை மற்றும் அகிம்சை, உலகிற்கு ஒரு புதிய வழியை உருவாக்கியது.
மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காக போராடியது மட்டுமல்லாமல், தூய்மை, பெண்கள் அதிகாரம், விவசாயிகளின் உரிமை, தீண்டாமை, சமூக பாகுபாடு மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக போராடினார்.
மகாத்மா காந்தி தேசத்தை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க தூண்டினார். வரலாற்றின் போக்கை மாற்றியமைத்து சுதந்திரத்தைப் பெற்ற ஒரு பெரிய இயக்கத்தை மகாத்மா காந்தி வழிநடத்தினார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா மற்றும் உலகின் பல அரசியல்வாதிகள் மகாத்மாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர்.
மகாத்மா காந்தியின் வலுவான மற்றும் துடிப்பான சித்தாந்தம் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும். காந்தி ஜெயந்தியின் நன்நாளில், நாட்டின் நலனுக்காக நம்மை அர்ப்பணிப்பதற்காக, நமது சிந்தனையிலும், பேச்சிலும், செயலிலும் அவரது விழுமியங்களையும், போதனைகளையும் பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்."
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.