பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்; பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து


பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் ஏமாற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள்; பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து
x

பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் ‘ஏ.டி.எம்.' எந்திரங்கள் ஏமாற்றுவதாக பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர்தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும்.

'அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு.

சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வு ஊதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச் சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் எம்.ஜி.ஆர். மணி கூறுகையில், "நவீன தொழில்நுட்பங்கள் வருகையால் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதை நாம் ஏற்று கொண்டுள்ளோம். இப்போது நமக்கு ரொக்க பணத்தின் தேவை குறைந்துவிட்டது. ஆனால் சில பணிகளுக்கு ரொக்கம் தேவைப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் வந்த பிறகு ஏ.டி.எம். மையங்களில் பணம் சரியாக கிடைப்பது இல்லை. சில நேரங்களில் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் பணம் கிடைப்பதே இல்லை. நான் அடிக்கடி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பது உண்டு. அங்கு பணம் கிடைக்காதபோது கோபம் வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நடைபெற்றாலும், ஏ.டி.எம். மையங்களில் எப்போதும் ரொக்க பணம் கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

சுற்றுலா செல்வோர் சிரமம்

மங்களூரு மேரிஹில் பகுதியை சேர்ந்த திருக்குமரன் கூறுகையில், "வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடிவதில்லை. ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தீர்ந்தாலும் அதனை வங்கி அதிகாரிகள் உடனடியாக நிரப்புவது இல்லை. இதனால் பண்டிகை நாட்களில் தேவைக்காக பணம் எடுக்க சென்றாலும், ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் சர்வர் பிரச்சினையால் பழுதாகி கிடக்கிறது. மேலும் ஏ.டி.எம். மையங்களையும் சரிவர பராமரிப்பது கிடையாது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் விஷயத்தில் வங்கிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். தொடர் விடுமுறை நாட்களில் பணம் தீர்ந்தவுடன் மீண்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

சிக்கமகளூரு மார்க்கெட் ரோடு சாக்குப்பை கடை உரிமையாளர் நடராஜ் என்பவர் கூறுகையில், "தொடர் விடுமுறை நாட்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம், சிலர் தேவைக்கு அதிகமாக பணத்தை எடுக்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பதில்லை. அதேபோல வெளியூர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பட்சத்தில் ஏ.டி.எம். மையங்களை நம்பி செல்ல முடிவதில்லை. அங்கு சர்வர் பிரச்சினை அல்லது பணம் இல்லாமல் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடுகிறது. எனவே வங்கி நிர்வாகங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் பணம் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் வெளியூர் அல்லது சுற்றுலா செல்லும் போது முன்எச்சரிக்கையாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீண் சிரமத்தை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து" என்றார்.

பொதுத்துறை வங்கிகளில்...

இதுகுறித்து கர்நாடக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி ராகவா கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஏ.டி.எம். எந்திரங்களில் முன்பு வங்கி நிர்வாகங்களே பணம் நிரப்பி வந்தன. தற்ேபாது தனியார் நிறுவனங்களே ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புகின்றன. வார இறுதியில் தொடர் விடுமுறைகள் வரும்போது, மக்கள் அதிகளவில் பணம் எடுக்கிறார்கள். இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் விரைவாக காலியாகி விடுகிறது. அதனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதனை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் பணம் கிடைப்பது இல்லை.

விடுமுறை முடிந்து அடுத்த நாள் நாங்கள் நேரில் வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதனால் அன்றைய தினம் பகலில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்புவது இல்லை. மாலையில் தனியார் ஏஜென்சி மூலம் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படுகிறது. பண்டிகை காலங்களில் அதிகம் பேர் ஏ.டி.எம்.களுக்கு வந்து பணம் எடுக்கிறார்கள். இதனால் அங்கு கூட்டம் அதிகமாகிறது.

சிலர் தங்களின் தேவைக்கு அதிகமாக பணத்தை எடுக்கிறார்கள். விடுமுறை நாட்களில் அதை தவிர்க்க வேண்டும். தனியார் வங்கிகள் விடுமுறை நாட்களிலும் பணத்தை நிரப்புகின்றன. அதனால் அந்த தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் எப்போதும் பணம் கிடைக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.களில் எப்போதும் பணம் கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராகவா கூறினார்.

போதுமான அளவு பணம் நிரப்ப வேண்டும்

பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி புருஷோத்தம் கூறுகையில், "வார இறுதி விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைகளின்போது, ஏ.டி.எம். மையங்களில் ரொக்க பணம் கிடைப்பது இல்லை. வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து ஓடி ஒளிய முடியாது. மாதத்தின் 2-வது சனிக்கிழமை விடுமுறை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அற்கு ஏற்றார்போல் ஏ.டி.எம். எந்திரங்களில் போதுமான அளவுக்கு பணத்தை நிரப்ப வேண்டும். பணத்தை எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் நேரத்தையும், சக்தியையும் எதற்காக வீணாக்க வேண்டும்?. தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால் மக்கள் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் ரொக்க பணத்தின் தேவை உள்ளது. சில இடங்களில் ரொக்க பணத்தை கையாள வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். விதிமுறைகளின்படி ஏ.டி.எம். எந்திரங்களில் எப்போதும் பணம் கிடைக்க வேண்டும். அதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை நாட்களில் எந்த தடையும் இன்றி ஏ.டி.எம்.களில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

பணப்புழக்கம் குறைந்துவிட்டது

சிவமொக்காவில் பாத்திர கடை நடத்தி வரும் ராஜேஷ் கூறுகையில், "ஏ.டி.எம். எந்திரத்தை நம்பி இருந்த காலம் இப்போது மாறிவிட்டது. முன்பு பணம் எடுக்க மக்கள் ஏ.டி.எம். மையங்களில் கால்கடுக்க காத்திருந்தனர். ஆனால் தற்போது சாலையோர கடைகளில் கூட போன்-பே, கூகுள்-பே போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் வந்துவிட்டன. இதனால் மக்கள் யாரும் ஏ.டி.எம். எந்திரங்களை நாடி செல்வதில்லை. மக்களிைடயே பணப்புழக்கம் குறைந்துவிட்டது. வேறு எதுவும் தேவைக்காக பணம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்றால் சிரமப்படுவார்கள். ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்படும் பணம் 3 நாட்களுக்குள் தீர்ந்து விடுகிறது. ஆனால் அதன்பிறகு நீண்ட நாள் கழித்து தான் பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புகிறார்கள். இதனால் அவசர தேவையாக பணம் எடுக்க வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏ.டி.எம். எந்திரங்களில் நிரந்தரமாக பணம் இருக்க வங்கி அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்" என்றார்.

வங்கிகளுக்கு அபராதம்

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் உள்ளதா? என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன? என்பது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமல் ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே அனைத்து வங்கிகளுக்கும் இதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story