காங்கிரஸ் எம்.பி.யின் 'தனி நாடு' தொடர்பான கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்


காங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு தொடர்பான கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
x

நாட்டைப் பிரிப்பது குறித்து யார் பேசினாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனிடையே பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ், "தென் இந்திய மாநிலங்கள் மூலம் பெறப்படும் வரி வருவாய் வட இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது தொடருமானால் தென் இந்திய மாநிலங்கள் தனி நாடு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்" என்று தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்த டி.கே.சுரேஷ், "நிதி பகிர்வில் மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தால் இழைக்கப்படும் அநீதியை முன்னிலைப்படுத்துவதே தனது பேச்சின் நோக்கம்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.யின் 'தனி நாடு' தொடர்பான கருத்துக்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாட்டைப் பிரிப்பது குறித்து யாரேனும் பேசினால் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால் மக்களவை எம்.பி., டி.கே. சுரேஷ் அந்த நோக்கத்தில் கூறவில்லை என்றால் அதை விவாதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.


Next Story