சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் 'உடான்' திட்டம் செயல்படவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு


சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் உடான் திட்டம் செயல்படவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
x

உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்தும் உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்று கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

பிராந்தியங்களுக்கு இடையே விமான வழித்தடங்களை ஏற்படுத்தவும், சாதாரண மக்களுக்கும் விமான போக்குவரத்தை எளிதாக்கவும் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு 'உடான்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தியது.

இந்த திட்டம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தளத்தில், 'இதை நாங்கள் கூறவில்லை, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கை கூறுகிறது. அதாவது உடான் திட்டம் 93 சதவீத வழித்தடங்களில் செயல்படவில்லை. விமான நிறுவனங்களின் வெளிப்படையான தணிக்கை கூட செய்யப்படவில்லை. ஆனாலும் இது வெளிவந்திருக்கிறது. மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சேவைகளும் முடங்கி இருக்கின்றன' என குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் 'உடான் செயல்படவில்லை. வெறும் பொய்களும், வெற்று வாக்குறுதிகளும் மட்டுமே. இப்படிப்பட்ட திறமையற்ற அரசை இந்தியா இப்போது மன்னிக்காது' என்றும் கூறியுள்ளார்.

செருப்பு அணிந்தவரும் விமானத்தில் செல்ல முடியும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி, மற்றுமொரு வெற்று வாக்குறுதி மட்டுமே என்றும் கார்கே தெரிவித்து உள்ளார்.


Next Story