மேற்கு வங்காள நிதியை விடுவிக்க கோரி பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்; கடும் குளிரிலும் தொடர்ந்த தர்ணா போராட்டம்


மேற்கு வங்காள நிதியை விடுவிக்க கோரி பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்; கடும் குளிரிலும் தொடர்ந்த தர்ணா போராட்டம்
x

வருகிற திங்கட் கிழமை மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த சூழலில் அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்திற்கு தேவையான பல்வேறு சமூகநல திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கொல்கத்தா நகரில் உள்ள மைதான் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் சிலை முன் நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.

தொடர்ந்து அவர், நேற்றிரவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிர்ஹத் ஹக்கீம் மற்றும் அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்ட மந்திரிகள் அவருடன் சேர்ந்து இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், மம்தா பானர்ஜி இன்று காலை சிவப்பு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன்பின்னர், கூடைப்பந்து மைதானத்திற்கு சென்று பார்வையிட்டார். சில வீரர்களை பார்த்ததும் நின்று, அவர்களுடன் பேசினார். அந்த விளையாட்டு பற்றியும், அதற்கு பயன்படுத்தும் பந்து பற்றியும் அவர் கேட்டு தெரிந்து கொண்டார்.

காலையில் கடுமையான குளிர் காணப்பட்டபோதும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் நடைபயிற்சியை மேற்கொண்டார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநிலத்திற்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டம் ஞாயிறு வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. வருகிற திங்கட் கிழமை மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த சூழலில் அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அவர் பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 2002-03 முதல் 2020-21 வரையிலான நிதியாண்டுகளுக்கான ரூ.2,29,099 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு, பயன்பாட்டு சான்றிதழ்களை சமர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என தணிக்கை அதிகாரி தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story