அரசு அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 கோடி மோசடி: 6 பேர் கைது


அரசு அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 கோடி மோசடி: 6 பேர் கைது
x

கோப்புப்படம்

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.15கோடி மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது அதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் புழக்கத்தில் வந்தன. இவற்றை மாநிலங்கள் தோறும் எடுத்துச் செல்வதற்கான பணி உத்தரவு பல்வேறு தனியாருக்கு வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல் அந்த பணியில் போலியாக களம் இறங்கியது. டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மாண் பவனை அந்த மோசடி கும்பல் தங்களது அலுவலகமாகவே காண்பித்துக் கொண்டது.

இதை நம்பி அந்த உத்தரவை பெறுவதற்காக பலர் ரூ.3 கோடி, ரூ.4 கோடி என பணம் கொடுத்துள்ளனர். இப்படி பலரிடம் ரூ.15 கோடிக்கும் மேல் பணத்தை வாங்கிகொண்ட மோசடி கும்பல் போலியாக ஒரு உத்தரவை தயாரித்து அவர்களுக்கு வழங்கியது. அவை போலி என தெரிய வரவே, ஏமாந்தவர்கள் அந்த மோசடி நபர்களை தேடினார்கள். ஆனால் மோசடி நபர்கள் 'டிமிக்கி' கொடுக்கவே டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

6 பேர் கைது

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஹார்மென் சபெர்வால், கோவிந்த் துல்ஷ்யன், சுகாதார அதிகாரிகள் போல நடித்த வினோத்குமார் ஷர்மா, வினய்குமார் மற்றும் பிரபுல்லகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியாக உமேஷ் பத்ரா (வயது 49) இருந்தார். இவர்தான் பிரதான அதிகாரியாக காட்டிக்கொண்டவர். போலீசார் தேடுவதை அறிந்ததும் இவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தொடர்ந்து தேடினார்கள். இந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் சரண் அடைய வந்த அவரையும் கைது செய்துவிட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

மோசடி குறித்து 6 பேர் புகார் அளித்து இருந்தனர். அவர்களிடம் மொத்தம் ரூ.15 கோடியை மோசடி கும்பல் பெற்றுள்ளது.


Next Story