விமானநிலையத்தில் நகைச்சுவைக்காக பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் படாதபாடு பட்ட நபர்..!


விமானநிலையத்தில் நகைச்சுவைக்காக பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் படாதபாடு பட்ட நபர்..!
x

விமான நிலையத்தில் ஒருவர் நகைச்சுவைக்காக பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பிரச்சனையாக மாறிப்போனது.

இந்தூர்,

மத்தியப்பிரதேசத்தில் விமான நிலையத்தில் ஒருவர் நகைச்சுவைக்காக பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பிரச்சனையாக மாறிப்போனது. தீவிர விசாரணை மற்றும் தேடுதலுக்கு ஆளாகி, பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் இதனால் விமானத்தையும் தவறவிட்டனர்.

இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மனைவி மற்றும் மகளுடன் விமான நிலையம் வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது பொருட்களுக்குள் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவர்களையும் அவர்களது பொருட்களையும் முழுமையாகச் சரிபார்த்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, ​​நகைச்சுவைக்காக கூறியதாக தெரிவித்த அந்த நபர், தனது பொறுப்பற்ற செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மேலும் அவரது பொருட்களில் சந்தேகத்துக்குரிய எதுவும் காணப்படவில்லை. தேடுதல் மற்றும் விசாரணையின் காரணமாக மூவரும் தங்கள் விமானத்தைத் தவறவிட்டனர் என்று விமான நிலைய இயக்குனர் சி.வி.ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து, ஏரோட்ரோம் காவல் நிலையப் பொறுப்பாளர் சஞ்சய் சுக்லா கூறுகையில், அந்த நபர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்ட பிறகே, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதித்தனர். இந்த விவகாரம் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

1 More update

Next Story