உ.பி.: நடத்தையில் சந்தேகம்; குழந்தைகளின் முன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை லக்னோ-பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் ராகுல் மிஸ்ரா, தனது மனைவியை காருக்குள் தனது குழந்தைகளுக்கு முன்னால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
விசாரணையின்போது, அந்த நபர் தனது மனைவி மோனிகா குப்தா மீது சந்தேகப்பட்டு வந்ததாகவும், அதனால் அவரைக் கொன்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் ரோந்து குழு சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகள் அன்ஷிகா (12) மற்றும் மகன் அதர்வா (6) ஆகியோரையும் கொன்றிருக்கலாம் எனவும் அதிகாரி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.