திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விவாகரத்தான 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீச்சு


திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விவாகரத்தான 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீச்சு
x

திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விவாகரத்தான 3 குழந்தைகளின் தாய் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நறுமணபொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் அகமது (36). அதே நிறுவனத்தில் 32 வயதான பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற அந்த பெண் தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் அகமதுவுக்கும் அந்த பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்து வந்துள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டதால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண்ணை அகமது கடந்த சில வாரங்களாக வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அகமதுவை திருமணம் செய்துகொள்ள அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அகமது அந்த பெண் மீது இன்று ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த ஆசிட் வீச்சில் அந்த பெண்ணின் வலது கண், மற்றும் உடலின் பல பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. ஆசிட் வீசிய அகமது அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த அந்த பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அகமதுவை தேடி வருகின்றனர். ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணும் தாக்குதல் நடத்திய அகமதுவும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story