மத்தியபிரதேசத்தில் நண்பரின் அடையாள அட்டையை திருடி 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி!


மத்தியபிரதேசத்தில் நண்பரின் அடையாள அட்டையை திருடி 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த தொழிலாளி!
x

திருடப்பட்ட அடையாள அட்டை மூலம் ஒருவர் 36 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போபால்,

மத்தியபிரேதச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்புர் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வயல்கள் உள்ளன. கடந்த 1984-ம் ஆண்டு நரசிங் தேவாங்கன் என்பவர் தனக்கு அறிமுகமான தாதாய்ராம் என்பவரது அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசு வேலைக்கு விண்ணப்பித்தார். அதன்படி நரசிங் தேவாங்கனுக்கு நிலக்கரி சுரங்கத்தில் அரசு வேலையும் கிடைத்தது.

அவர் தொடர்ந்து 36 ஆண்டுகளாக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு இறந்தார். இந்நிலையில் மரணத்துக்கு பிறகு கருணைத்தொகை மற்றும் இதர பலன்களை பெறுவதற்காக அவரது மனைவி அகில்யாபாய் விண்ணப்பித்தார். மேலும் அவர் வங்கி கணக்கு தொடங்குவதற்காக சென்றார்.

அப்போதுதான் நரசிங் தேவாங்கன் திருடப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்து அரசு வேலையில் சேர்ந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தாதாய்ராம் தற்போது சத்தீஷ்கார் மாநிலத்தின் கல்யாண்பூர் கிராமத்தில் வசித்து வருவது தெரிந்தது. 75 வயதான அவரது குடும்பம் வறுமையில் உள்ளது.

இது குறித்து அவரது மகன் ஹர்குஷாகுல் கூறுகையில், நான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மாதம் ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் கிடைக்கிறது. எனது தந்தையின் அடையாள அட்டையை திருடி நரசிங் தேவாங்கன் வாழ்நாள் முழுவதும் அரசு பணியில் இருந்துள்ளார். இது எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. எனது தந்தையும், நரசிங்கும் ஒரு காலத்தில் ஒன்றாக தொழிலாளர்களாக வேலை பார்த்தனர். அப்போதுதான் நரசிங் எனது தந்தையின் அடையாள அட்டையை திருடி அரசு வேலைக்கு சேர்ந்துள்ளார்" என்றார்.

மேலும் இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நரசிங் தேவாங்கனின் மனைவி, மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story