மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம்


மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம்
x

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கையில் உள்ளாடையை காண்பித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மண்டியா:

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கையில் உள்ளாடையை காண்பித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை பொய்த்துபோகும்போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்தநிலையில் காவிரி மேலாண்மையை ஆணையத்தின் உத்தரவின் பேரில் 2 முறை கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் நீரை திறந்துவிட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடவேண்டும் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கண்டித்து கர்நாடக மாநில முழுவதும் விவசாயிகள், கன்னட அமைப்பினர், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிைலயில் நேற்று மண்டியா கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் 32-வது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உள்ளாடையை காண்பித்து.....

இந்த போராட்டத்திற்கு கன்னட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் உள்ளாடை காண்பித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் அவர்கள், தமிழகத்திற்கு ஒரு நீதியும், கர்நாடகத்திற்கு ஒரு நீதியும் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்ப்பது சரியில்லை. கர்நாடக விவசாயிகளுக்கான போராட வேண்டிய அரசியல் தலைவர்கள் உள்ளாடையை குறித்து பேசி வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா? உள்ளாடை விவகாரம் முக்கியமா?. கர்நாடக விவசாயிகள் நீர்ப்பாசனத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் உள்ளாடை விவகாரம் தேைவயில்லாது. காவிரி மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் போராடி நீதி கிடைக்க செய்யவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். இதேபோல சர்.எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் ஜனதா தளம் (எஸ்) முன்னாள் எம்.எல்.ஏ. அன்னதாணி தலைமையில் கண்டன ஊர்வலம் நடந்தது. பின்னர் அவர்கள் பூங்காவிற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் மாநில அரசு சட்டரீதியாக போராடி கர்நாடகத்திற்கு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று முழக்கமிட்டனர்.

1 More update

Next Story