மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு


மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ஓரிரு நாளில் என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

மங்களூரு:

மங்களூரு குண்டுவெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த மற்றொரு நபர், தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும், அவர் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றபோது, வெடித்தது தெரியவந்தது. மேலும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அந்த குக்கர் குண்டுவை ஷாரிக் தயாரித்ததும், துரதிஷ்டவசமாக டெட்னேட்டருடன் வயர் இணையாமல் இருந்ததால் குக்கரில் இருந்த 'ஜெல்' மட்டும் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் காத்திருப்பு

இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் ஒவ்வொரு மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து வருகின்றன. அதாவது, பயங்கரவாதி ஷாரிக், தமிழ்நாடு கோவை, நாகர்கோவில், ஊட்டி, கேரள மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று தங்கி உள்ளார். மேலும் கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினையும் ஷாரிக் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உப்பள்ளியை சேர்ந்த ரெயில்வே ஊழியர் தவறவிட்ட ஆதார் கார்டு மூலம், ஷாரிக் தன்னை ஒரு இந்து என்று வெளியுலகிற்கு அடையாளம் காட்டி வந்துள்ளார். தனது வாட்ஸ்-அப்பில் ஆதியோகி சிவன் படத்தை வைத்திருந்தார். மேலும் அவருக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன், வீட்டு உரிமையாளர் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முக்கிய தகவல்கள் கிடைக்கும்

இந்த நிலையில் ஷாரிக்கின் உடல்நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. அவருக்கு 8 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஷாரிக்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர் குணமடையும் வரை போலீசார் காத்திருக்கிறார்கள்.

அவர் குணமடைந்து வந்தால் தான் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாகவும், அவருக்கு யார் எல்லாம் உதவினார்கள்? எந்தந்த பயங்கரவாத அமைப்புடன் ஷாரிக்கிற்கு தொடர்பு உள்ளது உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரக ஞானேந்திரா ஆய்வு

இந்த நிலையில் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த இடத்தை மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட், மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்ததில் பாதிக்கப்பட்ட ஆட்டோவையும் பார்வையிட்டனர்.

இதையடுத்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மந்திரி அரக ஞானேந்திரா உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை குறித்தும், விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த கூட்டம் முடிந்ததும் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடையாளம் காணமுடியவில்லை

மங்களூரு நாகுரி பகுதியில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக், சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர். அவர் செல்போன் பழுது பார்க்க கற்றுக் கொண்டுள்ளார். கேரளா, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸ் டி.ஜி.பி. ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவினர் முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர். ஷாரிக்கின் பின்னணி, அவருக்கு நிதிஉதவி மற்றும் பொருள் உதவி அளித்தவர்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஷாரிக் குற்றவாளி என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

ஷாரிக், தான் ஒரு இந்து என்ற அடையாளத்துடன் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் அவர் பயங்கரவாதி என அடையாளம் காணவும், அவரை பற்றி சந்தேகிக்கவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும்

ஷாரிக் விரைவில் குணமடைய வேண்டும். ஏனெனில் அவரிடம் விசாரணை நடத்தினால் தான் குண்டுவெடிப்பு பற்றியும், சதி திட்டம் பற்றியும் முக்கிய தகவல்கள் கிடைக்கும். இது விசாரணைக்கு பெரிதும் உதவும். ஷாரிக்கிற்கு 8 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்த நாள் முதல் மத்திய விசாரணை அமைப்புகள், போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைக்க நாாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசுக்கு கடிதம்

முன்னதாக கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நேற்று காலை மங்களூருவுக்கு வந்து குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினார். மேலும் வெடிகுண்டு வெடித்த நாகுரி பகுதி, குண்டுவெடிப்பில் சேதமான ஆட்டோவையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஷாரிக் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் சீர்குலைக்க நினைத்தார். இருபிரிவினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தவும், நாட்டை பிளவுபடுத்தவும் குறிக்கோளாக கொண்டிருந்தார். இதனால் அவர் தனது அடையாளத்தை மறைத்து நாசவேலையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டினார். ஷாரிக்கின் பயங்கரவாத செயலுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் இப்போது வெளியிட முடியாது. இப்போது குற்றவாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரியவரும். தற்போது அனைத்து தகவல்களையும் வெளியிட்டால், விசாரணையில் சிக்கலை ஏற்படுத்தும்.

என்.ஐ.ஏ. மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் எங்களுடன் இணைந்து விசாரணை நடத்துகிறார்கள். 'உபா' சட்டத்தின் கீழ் வழக்கு இருக்கும்போது, அது என்.ஐ.ஏ.வுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் விசாரணையின் ஒது பகுதியாக இருப்பார்கள். இந்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ. வசம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 மாநிலங்களிலும் தீவிர விசாரணை

தமிழகம், கேரளா என அனைத்து பகுதிகளிலும் விசாரணை நடந்து வருகிறது. எங்கள் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள். இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்களை நாங்கள் கைது செய்யவில்லை.

விசாரணைக்கு மட்டும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே பெங்களூரு உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தி 5 பேரை பிடித்து விசாரித்தோம். அவர்களிடம் ஷாரிக் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். ஆனால் ஷாரிக்கிற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டோ டிரைவரின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - அரக ஞானேந்திரா

மங்களூரு நாகுரி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவர் பலத்த காயம் அடைந்து பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரை உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அரக ஞானேந்திரா தனது சொந்த செலவில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் புருஷோத்தமுக்கு கொடுத்தார். இதையடுத்து அவர் கூறுகையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். புருஷோத்தமுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்-மந்திரியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.


Next Story