மணிப்பூர்: பாஜக அலுவலகம் அருகே கூடியிருந்த கூட்டம் - மோதலை தவிர்க்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பாஜக அலுவலகம் கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்காமல் உள்ளது.
மணிப்பூர் நிலைமை குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா நேற்று முன்தினம் எடுத்துரைத்தார்.
இந்த சூழலில் இரண்டு நாள் பயணமாக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் சென்றார். மணிப்பூரின் இம்பால் நகரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களை அவர் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள பாஜகவின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.